< Back
உலக செய்திகள்
ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் சோகம்; 190 பேர் பலி, 584 பேர் காயம்
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் சோகம்; 190 பேர் பலி, 584 பேர் காயம்

தினத்தந்தி
|
15 March 2023 2:27 PM IST

ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டை சூறையாடிய பிரெட்டி என்ற பருவகால சூறாவளியால் 190 பேர் பலியாகி உள்ளனர்.

மலாவி,



கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும்.

இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சக அறிக்கை எச்சரித்து இருந்தது. இதற்கேற்ப சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தெற்கு மலாவியில் நிலைமை இன்று மோசமடைந்து உள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்து உள்ளது.

அந்த அறிக்கையில், இன்று நிலைமை மோசமடைந்து, எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.

இதேபோன்று, பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்த துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார்.

இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 190 பேர் உயிரிழந்து உள்ளனர். 584 பேர் காயமடைந்து உள்ளனர். 37 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.

தெளிவற்ற வானிலையால் மீட்பு பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது என சி.என்.என். தெரிவிக்கின்றது. நிலைமை நாளை சீரடைய கூடும். சூறாவளி கடந்து சென்று விடும் சாத்தியம் உள்ளது. ஆனால், இன்று நிலைமை படுமோசம். கனமழையும், வெள்ளமும் காணப்படுகிறது என கலேம்பா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்