< Back
உலக செய்திகள்
எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்... போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா...!

 Image Courtesy : AFP

உலக செய்திகள்

எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்... போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா...!

தினத்தந்தி
|
26 Dec 2022 12:20 PM GMT

வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.

சீயோல்,

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவின் ஆளில்லா டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் வடகொரிய டிரோன்கள் தென்கொரிய எல்லைக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

வடகொரியாவில் இருந்து 5 ஆளில்லா உளவு விமானங்களான டிரோன்கள் தென்கொரிய எல்லைக்குள் நுழைந்துள்ளன. இந்த டிரோன்களில் ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் தெற்கு பகுதி எல்லைக்குள் மிகவும் உள்ளே வந்துள்ளது.

வடகொரிய டிரோன்கள் நுழைந்ததையடுத்து தென்கொரிய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக விரைந்தன.

வடகொரிய டிரோன்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. மேலும், டிரோன்களை சுட்டு வீழ்த்த போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விரைந்தன. தாக்குதல் ஹெலிகாப்டர்கள் 100 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் டிரோன்கள் வீழ்த்தப்பட்டனவா? என்ற தகவல் வெளியாகவில்லை.

வடகொரியாவின் டிரோன் விமானங்கள் எல்லைக்குள் நுழைந்ததற்கு பதிலடியாக தென்கொரிய உளவு விமானங்கள் (டிரோன்கள்) எல்லை அருகேயும், எல்லையை தாண்டியும் உள்ள வடகொரிய ராணுவ தலங்களை புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டன' என்று தென்கொரிய முப்படை தலைமை தளபதி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்