< Back
உலக செய்திகள்
முன்னாள் காதலியை கொடூரமாக கொன்றவனுக்கு விடுதலை அளித்த ரஷிய அதிபர்: ஏன் தெரியுமா?காதலியுடன் கன்யூஸ்
உலக செய்திகள்

முன்னாள் காதலியை கொடூரமாக கொன்றவனுக்கு விடுதலை அளித்த ரஷிய அதிபர்: ஏன் தெரியுமா?

தினத்தந்தி
|
11 Nov 2023 6:06 PM IST

கன்யூஸ் ராணுவ உடையில் ஆயுதம் ஏந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா மனமுடைந்தார்.

மாஸ்கோ:

ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயதான வேரா பெக்டெலேவா என்ற பெண், தனது காதலன் விளாடிஸ்லாவ் கன்யூஸ் என்பவருடனான உறவை முறித்துக்கொண்டுள்ளார். அதனால் ஏற்பட்ட பிரச்சினையில் வேராவை கொடூரமாக கொலை செய்துள்ளான் கன்யூஸ். மூன்றரை மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததுடன், 111 முறை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தியும், இரும்பு கேபிள் மூலம் கழுத்தை இறுக்கியும் கொன்றுள்ளான்.

வேராவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் 7 முறை போலீசாருக்கு போன் செய்தும், பதில் வரவில்லை. பின்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது வேரா இறந்து கிடந்துள்ளார். காதலன் கன்யூசை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணையின் முடிவில், கன்யூஸ்க்கு குறைந்தபட்ச தண்டனையாக 17 வருட சிறை தண்டனை கிடைத்தது.

இந்நிலையில், குற்றவாளி கன்யூஸ் உக்ரைன் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, ரஷ்ய அதிபர் புதின் அவனை கருணை அடிப்படையில் விடுதலை செய்தார். மொத்த தண்டனைக் காலமான 17 வருட காலத்தில் இன்னும் 1 வருடம் கூட நிறைவு செய்யாத நிலையில், அவனை விடுவித்துள்ளனர்.

கன்யூஸ் ராணுவ உடையில் ஆயுதம் ஏந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா மனமுடைந்தார். தன் மகளை கொன்ற கொலையாளியை மன்னித்த புதின் மீது குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "கொடூரமான கொலைகாரனிடம் ரஷ்யாவைப் பாதுகாக்க எப்படி ஆயுதம் கொடுக்க முடியும்? இது எனக்கு ஒரு அடி. என் குழந்தை அவளுடைய கல்லறையில் அழுகிவிட்டாள், நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன், எனது வாழ்க்கையில் இனி எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை.

நான் வாழவில்லை, நான் உயிர் இருந்தும் இல்லாதது போல் இருக்கிறேன். இந்த மாதிரியான ஒரு சம்பவம் என்னை முழுமையாக உடைத்துவிட்டது. நான் மிகவும் வலிமையானவள். ஆனால் நமது அரசின் இந்த அநீதி என்னை வாழ்வின் கடைசி கட்டத்திற்கு தள்ளுகிறது. அடுத்து என்ன செய்வது என்று அறியாத நிலையில் இருக்கிறேன்'', என்று கண்ணீர்விட்டு அழுதார்.

உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள ரோஸ்டோவுக்கு கன்யூஸ் மாற்றப்பட்டதை சிறை அதிகாரிகள் உறுதி செய்ததாக பெண்கள் உரிமை ஆர்வலர் அலியோனா போபோவா புதன்கிழமை தெரிவித்தார். மேலும் நவம்பர் 3 என தேதியிடப்பட்ட அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலக கடிதத்தையும் பகிர்ந்தார். அதில், கன்யூஸ்-க்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும், அவரது தண்டனை ஏப்ரல் 27 அன்று அதிபரின் ஆணை மூலம் நீக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிபரின் இந்த கொள்கையை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஆதரித்தார். உக்ரைனில் சண்டையிட அனுப்பப்பட்ட ரஷ்ய கைதிகள் தங்கள் குற்றங்களுக்கு ரத்தத்தால் பரிகாரம் செய்கிறார்கள் என்றும் பெஸ்கோவ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்