ரஷியாவில் பயங்கரம்: மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்த மாணவி
|துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவின் உக்ரைன் எல்லையில் உள்ளது பிரையன்ஸ்க் நகரம். இங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 14 வயது சிறுமி இன்று திடீரென தனது சக மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, ஐந்து பேர் காயமடைந்தனர். இதன் பின்னர் அந்த சிறுமி தன்னைத் தானே சுட்டு இறந்திருக்கிறார்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ரஷிய அரசு செய்தி நிறுவனம் ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய ஒரு வீடியோவை செய்தி நிறுவனம் ஆர்ஐஏ பகிர்ந்துள்ளது. அதில் தாக்குதலின்போது மேசைகள் மற்றும் நாற்காலிகளால் அடைக்கப்பட்ட கதவுக்குப் பின்னால் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் பயத்தில் இருப்பது பதிவாகியிருக்கிறது.
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார், முதற்கட்ட விசாரணையில், 14 வயது சிறுமி துப்பாக்கியை பள்ளிக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. சிறுமிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது குறித்து அவரது தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக ரஷிய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.
இதேபோல் கடந்த காலங்களிலும் ரஷியாவில் பல பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய ரஷியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர், 24 பேர் காயமடைந்தனர்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மத்திய ரஷியாவில் உள்ள மழலையர் பள்ளியில் ஒரு நபர் இரண்டு குழந்தைகளையும் ஒரு ஊழியரையும் சுட்டுக் கொன்றார்.
2021 ஆம் ஆண்டு மே மாதம், ஒரு நபர், கசானில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏழு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில், ரஷிய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் 18 வயது மாணவர் ஒரு கல்லூரியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.