< Back
உலக செய்திகள்
எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு
உலக செய்திகள்

எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு

தினத்தந்தி
|
28 May 2023 7:26 PM IST

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ராணுவத்திற்கு புதின் உத்தரவிட்டுள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷியா, அந்நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

உக்ரைனின் கெர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய நான்கு பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் புதின் அறிவித்தார். இதனிடையே உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷியாவின் எல்லை காவலர் தின வாழ்த்து செய்தியில் புதின் கூறும் போது, ரஷிய கூட்டமைப்பின் புதிய குடிமக்களுக்கு அனுப்பப்படும் உணவு, மனிதாபமான உதவி, கட்டுமானப் பொருட்கள் உள்பட ராணுவ மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் சரக்குகளின் விரைவான இயக்கத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் அந்த எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்