< Back
உலக செய்திகள்
உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய சதித்திட்டம்- திடுக்கிடும் தகவல்கள்

Photo Credit: AFP

உலக செய்திகள்

உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய சதித்திட்டம்- திடுக்கிடும் தகவல்கள்

தினத்தந்தி
|
9 May 2024 7:39 AM IST

உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.

கீவ்,

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவ அமைப்பான நேட்டோவில் இணைவதாக உக்ரைன் அறிவித்ததையடுத்து அதன் மீது அண்டை நாடான ரஷியா போரை தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதால் ராணுவ பலம் மிகுந்த ரஷியாவின் நடவடிக்கையை சமாளித்து வருகிறது.

இருப்பினும் உக்ரைன் மீது கூலிப்படை தாக்குதல், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றுடன் கூடிய தாக்குதலை ரஷியா மேற்கொண்டு உக்ரைன் நாட்டை ஒடுக்க முயற்சித்து வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகளை அவர்கள் கக்கியுள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு:-

உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர். இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதன்மூலம் நாட்டின் ரகசிய நடவடிக்கைகள், ராணுவ தாக்குதல்கள் குறித்தான தகவல்கள் ஆகியவற்றை கசிய விட்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் அவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொன்று விடுமாறு ரஷியா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பலகோடி பணம், ரஷியா நாட்டு குடியுரிமை, பெண்கள் ஆகியவை பேரமாக பேசப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட பின்னர் ரஷியாவில் இருந்து உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமும் வகுத்து தரப்பட்டுள்ளது. இதுகுறித்தான தகவல்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்