உக்ரைன் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்குதல்; 17 பேர் பலி
|உக்ரைன் மீது ரஷிய ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில், 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள், மருத்துவ மற்றும் கல்வி மையங்களும் சேதமடைந்தன.
கீவ்,
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. பல நகரங்களை ரஷியா ஆக்கிரமிப்பதும், உக்ரைன் அதனை மீட்பதும், பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, ரஷியாவின் 3 ஏவுகணைகள் உக்ரைனின் செர்னிகிவ் நகர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தின. இதில், பொதுமக்களில் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில், 3 குழந்தைகள் உள்பட 60 பேர் காயமடைந்தனர். மேயர் அலெக்சாண்டர் லொமேகோ கூறும்போது, தாக்குதலில் 8 அடுக்குமாடிகளை கொண்ட ஓட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்களும் சேதமடைந்து விட்டன என கூறினார்.
20-க்கும் மேற்பட்ட வாகனங்கள், மருத்துவ மற்றும் கல்வி மையங்களும் சேதமடைந்தன. அருகேயுள்ள குடியிருப்புகள், அழகு நிலையம், பீர் விற்பனை கடை உள்ளிட்டவை தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பெலாரஸ் நாட்டின் எல்லையையொட்டிய செர்னிகிவ் பகுதியில், ரஷியா படையெடுப்பின்போது தொடக்கத்தில், படையினர் ஆக்கிரமித்தபோதும், பின்னர் 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் மோதல் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, ஐரோப்பிய கவுன்சிலில் வீடியோ இணைப்பு வழியே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது, இஸ்ரேல் நாட்டிடம் இருப்பது போன்று, வான்வழி தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையிலான பாதுகாப்பு விசயங்கள் எங்களுடைய நாட்டிற்கும் வேண்டும். அதனால், கூடுதலான வான்பாதுகாப்பு உபகரணங்களை தந்து உதவிட வேண்டும் என்று வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து, ரஷியாவை கடுமையாக குற்றம்சாட்டி பேசிய ஜெலன்ஸ்கி, ரஷியாவின் பயங்கர செயல்களை தடுக்க உலக நாடுகள் முற்பட்டால், அதற்கு உக்ரைனுக்கு போதிய வான்பாதுகாப்பு சாதனங்கள் கிடைத்திருக்க வேண்டும். அப்போது, இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு இருக்கும் என்று கூறினார்.
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து வடக்கே 145 கி.மீ. தொலைவில் செர்னிகிவ் நகரம் அமைந்துள்ளது. போருக்கு முன் 2.85 லட்சம் பேரை உள்ளடக்கிய இந்த நகரை 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் பெலாரஸ் எல்லையில் இருந்து சென்ற ரஷிய பீரங்கிகள் முற்றுகையிட்டு சிறை பிடித்தது. அந்த ஆண்டின் ஏப்ரல் வரை அந்நகரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இந்த பகுதியில் மீண்டும் ரஷியா தாக்குதலை தொடுத்து உள்ளது.