உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றிய ரஷிய கூலிப்படை அமைப்பு; கொடியையும் நாட்டியது
|உக்ரைனுக்கு எதிரான போரில் பாக்முத் நகரை கைப்பற்றிய ரஷியாவின் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பு, பின்பு கொடியையும் நாட்டியுள்ளது.
மாஸ்கோ,
உக்ரைன் மற்றும் ரஷியா நாடுகளுக்கு இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது ஓராண்டை கடந்தும், தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைனின் கீவ், தொன்பாஸ் போன்ற முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றுவதும், அதனை உக்ரைன் மீட்டெடுப்பதும் நடந்து வருகிறது. கடந்த அக்டோபரில் இருந்து உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு அடுக்கடுக்காக ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
பாக்முத் நகரின் கிழக்கே போர் தீவிரமடைந்த நிலையில், கூடுதல் ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அரசு மற்ற நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தது. இதற்கு ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என முனிச் மாநாட்டின் ஒரு பகுதியாக பேசும்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
இதேபோன்று, பாக்முத் பகுதியில் போரில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஷியா, மேற்கத்திய நாடுகள் ரஷியாவை அழிக்க முற்படுகின்றன என குற்றச்சாட்டு கூறியது. போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுகிறது என்றும் கடந்த பிப்ரவரியில் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது.
தொடர்ந்து பாக்முத் நகரை கைப்பற்றும் நோக்குடன் ரஷியா போரில் ஈடுபட்டது. இதில், ரஷியாவின் கூலிப்படை நிறுவனம் என கூறப்படும் வாக்னர் அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு பற்றி அமெரிக்கா கூறும்போது, ரஷியாவின் கூலிப்படை நிறுவனம் என கூறப்படும் வாக்னர் குழுவை சேர்ந்த 30 ஆயிரம் பேர் போரில் மரணம் அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து உக்ரைனில் போரில் உயிரிழந்த வாக்னர் வீரர்களில் 90 சதவீதம் பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது.
போர் நீடித்து வரும் நிலையில், பாக்முத் நகரை கைப்பற்றி விட்டோம் என்று ரஷியாவின் வாக்னர் கூலிப்படை குழுவின் நிறுவனர் எவ்ஜெனி பிரிகோஜின் இன்று கூறியுள்ளார். தொழில் நுட்ப முறையில் பாக்முக் நகரை கைப்பற்றி, சிட்டி ஹால் பகுதியில் ரஷியாவின் கொடியையும் நாட்டி விட்டோம் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, சரியாக ஏப்ரல் 2-ந்தேதி இரவு 11 மணியளவில் இது நடந்தது. எனக்கு பின்னணியில் நகர நிர்வாகத்தின் கட்டிடம் (ஆர்டியோமோவ்ஸ்க்) உள்ளது என அவர் கூறியுள்ளார்.
ரஷிய கொடியானது விளாட்லென் டாட்டர்ஸ்கைக்காக நடப்பட்டு உள்ளது என அப்போது அவர், கூறியுள்ளார். டாட்டர்ஸ்கை என்பவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த ரஷிய ராணுவத்தின் செய்தி சேகரிக்கும் நிருபர் ஆவார்.
அந்த கொடியில் நன்றியின் நினைவாக என எழுதப்பட்டு உள்ளது. ரஷிய படை பிரிவின் தளபதிகள், சிட்டி ஹால் மற்றும் ஒட்டுமொத்த மத்திய மாவட்ட பகுதிகளிலும் கொடிகளை சுமந்து சென்று அவற்றை நாட்டுவார்கள் என்று பிரிகோஜின் கூறியுள்ளார்.