< Back
உலக செய்திகள்
கிழக்கு பகுதியில் முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டது - ரஷிய படைகள் பின்வாங்கின

கோப்புப்படம் AFP

உலக செய்திகள்

கிழக்கு பகுதியில் முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டது - ரஷிய படைகள் பின்வாங்கின

தினத்தந்தி
|
12 Sept 2022 2:23 AM IST

கிழக்கு உக்ரைனில் முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டது. ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்கின.

கீவ்,

நேட்டோ அமைப்பில் சேர்ந்து உக்ரைன் பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு, உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.

முதலில் உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை தாக்குவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தாக்குதல் தொடுப்பதாகக் கூறிய ரஷியா பின்னர் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள் என தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியது. உக்ரைன் படை வீரர்கள் மட்டுமல்லாமல் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனாலும் தலைநகர் கீவை கைப்பற்ற வேண்டும் என்ற ரஷிய கனவு, உக்ரைனின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாமல் போனது.

அதன்பின்னர் ரஷியாவின் பார்வை, கிழக்கு உக்ரைன் மீது படிந்தது. டான்பாஸ் பகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்று துடித்தது. அந்தப் பகுதியின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு பல நகரங்கள் ரஷியாவின் வசமாகின. அந்த நகரங்களை மீட்டெடுக்க ரஷியாவுடன் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறத.

இந்த நிலையில் உக்ரைனில் கிழக்கு பகுதியில் ரஷியா வசம் போன முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டன. இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் பின்வாங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கையில், "கிழக்கில் ரஷிய படைகளுக்கு முக்கிய வினியோக மையமாக குபியன்ஸ்க் செயல்பட்டு வந்தது. அங்கும் உக்ரைன் படைகள் நுழைந்துள்ளன" என குறிப்பிட்டனர்.

ரஷிய ராணுவ அமைச்சகம், தனது படைகளை மீண்டும் ஒருங்கிணைக்க அனுமதிக்கும் வகையில் இஸியம் நகரில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் டொனெட்ஸ்க் போர்முனையில் முயற்சிகளை வலுப்படுத்தும் விதத்தில், மூன்றாவது முக்கிய நகரமான பலாக்லியாவிலிருந்து தங்கள் படைகள் திரும்பப் பெறப்பட்டதையும் ரஷிய ராணுவ அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

தற்போது போரில் உக்ரைன் முன்னேறினால், கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் கீவின் சுற்றுப்புறங்களில் இருந்து ரஷியா வெளியேறியதில் இருந்து இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இதையொட்டி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் வீடியோவில் வெளியேற்றிய உரையில் கூறும்போது, "இந்த மாத தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிலடியை ஆரம்பித்ததில் இருந்து ரஷியாவிடம் இருந்து 2 ஆயிரம் ச.கி.மீ. பகுதியை உக்ரைன் விடுவித்துள்ளது" என தெரிவித்தார். இஸியம் நகரில் இருந்து ரஷிய படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அந்த நாடே ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் செய்திகள்