#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் உள்ள நகரின் அனைத்து பாலங்களையும் தகர்த்த ரஷிய படைகள்
|கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள செவிரோடோனெட்ஸ்க் நகரின் அனைத்து பாலங்களையும் ரஷிய படைகள் தகர்த்துவிட்டன
Live Updates
- 15 Jun 2022 9:43 PM IST
ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதியை அதிகரிக்க இஸ்ரேல்-எகிப்து ஒப்பந்தம்
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் எகிப்து நாட்டின் கெய்ரோவுக்கு இன்று பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன்படி, இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பாவிற்கு எரிவாயு ஏற்றுமதியை அதிகரிக்க இஸ்ரேலும் எகிப்தும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்போதைய சூழலில், உக்ரைன் போரின் விளைவாக, எகிப்து தானிய பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது. இதனை கருத்திற் கொண்டு, எகிப்துக்கு 100 மில்லியன் யூரோக்கள் ($104 மில்லியன்) மதிப்புள்ள உணவு நிவாரணம் அளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உறுதியளித்தார்.
- 15 Jun 2022 4:11 PM IST
போர் முடிவுக்கு வர ரஷியாவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டும் - உக்ரைன் அதிபருக்கு பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்
போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
ருமேனியா மற்றும் மால்டோவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில்,
"போர் முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் அவரது அதிகாரிகளும் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார்.
- 15 Jun 2022 1:27 PM IST
செவரோடோனெட்ஸ்க் : உக்ரைன் வீரர்கள் சரணடைய ரஷியா வலியுறுத்தல்
உக்ரைனின் முக்கிய கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்க் கடுமையான சண்டைக்குப் பிறகு இப்போது “பெரும்பாலும்” ரஷிய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்தநிலையில் ஆயுதங்களை கீழே போடுமாறு ரஷியா உக்ரைன் படைகளிடம் கூறியுள்ளது.
"தங்கள் அறிவில்லாத எதிர்ப்பை நிறுத்தி கொண்டு ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்" என்று ரஷியாவின் தேசிய பாதுகாப்பு மேலாண்மை மையத்தின் தலைவர் மிகைல் கூறியுள்ளார். மனிதாபிமான நடைபாதை வழியாக பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
- 15 Jun 2022 6:03 AM IST
உக்ரைனின் செவிரோடோனெட்ஸ்க், கார்கீவ் பகுதிகள் கடினமான இழப்புகளை சந்தித்து வருகின்றன - ஜெலென்ஸ்கி
செவிரோடோனெட்ஸ்க், கார்கீவ் பகுதிகள் கடினமான இழப்புகளை சந்தித்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டுக்கு தற்போது நவீன ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும், அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
- 15 Jun 2022 5:14 AM IST
செவிரோடோனெட்ஸ்க் நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு மனிதாபிமான வழித்தடத்தை திறக்கபோவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதநேயத்தின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, ரஷிய ஆயுதப் படைகளும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் அமைப்புகளும் பொதுமக்களை வெளியேற்ற ஒரு மனிதாபிமான நடவடிக்கையை ஏற்பாடு செய்ய தயாராக உள்ளன” என கூறப்பட்டுள்ளது.
மேலும் செவிரோடோனெட்ஸ்க் நகரின் அசோட் ரசாயன ஆலையில் இருக்கும் உக்ரைன் வீரர்கள் நாளைக்குள் சரணடைய வாய்ப்பு வழங்குவதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
- 15 Jun 2022 4:27 AM IST
கிழக்கு நகரங்கள் மீது ரஷிய துருப்புக்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாக கீவ் தெரிவித்துள்ளது
உக்ரேனிய ஆயுதப்படைகளின் தகவல்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான செவெரோடோனெட்ஸ்க் மீது கடுமையான சண்டை தொடர்வதால், கிழக்கு உக்ரைனில் பல இடங்களில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.
ரஷியா தனது ராணுவத்தை மீண்டும் ஒருங்கிணைத்து வருகிறது என்றும் மீண்டும் ராணுவ வலுவூட்டல்களை கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- 15 Jun 2022 4:10 AM IST
4 மாதங்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷிய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதை பிரதான இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதில் ரஷிய படைகள் மெதுவாக, அதே சமயம் சீராக முன்னேறி வருகின்றன.
டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியார்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகள் எளிதில் ரஷிய படைகள் வசம் சென்றுவிட்டன. அந்த பிராந்தியத்தில் உக்ரைனின் ஆளுகைக்குள் இருக்கும் ஒரு சில பகுதிகளையும் ரஷியா படைகள் ஆக்கிரமித்துவிட்டால் டான்பாஸ் பிராந்தியம் முழுவதும் ரஷியாவுக்கு சொந்தமாகிவிடும்.
டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய தொழில் நகரமான செவிரோடோனெட்ஸ்க் சமீபத்திய வாரங்களில் கிழக்கு உக்ரைன் போரில் முக்கிய கவனம் பெற்று வருகிறது. அந்த நகரில் 80 சதவீத பகுதிகள் ரஷிய படைகள் வசம் சென்றுவிட்டன.
அனைத்து பாலங்களும் தகர்ப்பு
எஞ்சிய 20 சதவீத பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செவிரோடோனெட்ஸ்க் நகருக்கு செல்லக்கூடிய அனைத்து பாலங்களை ரஷிய படைகள் தகர்த்துவிட்டன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் துருப்புக்களை வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது சாத்தியமற்றதாகி உள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்னர் 1 லட்சம் பேர் வாழ்ந்து வந்த செவிரோடோனெட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் ரஷிய படைகளின் தாக்குதலால் கடினமான சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.