ரஷிய பாதுகாப்பு மந்திரி வடகொரியாவுக்கு திடீர் பயணம்
|ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கே சொய்கு வடகொரியாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
மாஸ்கோ,
ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கே சொய்கு மற்றும் அந்நாட்டு ராணுவ குழுவினர், வடகொரியா நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இதன்படி, சுனான் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்த அவரை வடகொரிய பாதுகாப்பு மந்திரி காங் சுன்-னாம் வரவேற்றார்.
கொரிய போர் நிறைவடைந்த 70-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ரஷிய குழு பங்கேற்க உள்ளது. இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உதவும் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவரான லி ஹாங்ஜாங், இந்த வாரம் தனது குழுவினருடன் வடகொரியாவுக்கு செல்ல இருக்கிறார். இந்த நிலையில், ரஷிய மந்திரியின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ரஷியா மற்றும் சீனா என இரு நாடுகளும் வடகொரியாவின் நீண்டகால நட்பு நாடுகளாக உள்ளன. கொரிய போரில் அந்நாட்டுக்கு ஆதரவாக சென்ற சீன படையினரில் 1.8 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
ரஷியாவும் வடகொரியாவுக்கு, போரின்போது ஆதரவளித்தது. வடகொரியாவின் பல்வேறு ராக்கெட் பரிசோதனைகளுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் இரு நாட்டு குழுவினரின் பயணம் முக்கியம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.