சிரியாவில் ரஷ்ய ராணுவம் வான்தாக்குதல் - சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி
|சிரியாவில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்,
சிரியாவில் அரசு படைகளுடன் சண்டையிட்டு வரும் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பல ஆண்டுகளாக அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது சிரியாவின் வடக்கு பிராந்தியம் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கடைசி இருப்பிடமாக உள்ளது.
அங்குள்ள இத்லீப் மாகாணம் அல்-கொய்தா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களிடமும், அலெப்போ மாகாணம் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களிடமும் உள்ளது. இந்த 2 மாகாணங்களையும் கைப்பற்ற ரஷ்ய படைகளின் உதவியோடு சிரியா ராணுவம் அங்கு அவ்வப்போது வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இத்லீப் மாகாணத்தின் ஜிஸ்ர் அல்-ஷோகர் நகரில் நேற்று காலை ரஷ்ய ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவின் போர் விமானம் சரமாரியாக குண்டுகளை வீசியதில், ஒரு குண்டு அங்குள்ள வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு தரைமட்டமானது. இந்த வான்வழி தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.