போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்வந்த ரஷியா: தாக்குதல் நடத்தி தகர்த்த உக்ரைன் - அதிர்ச்சி தகவல்
|போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷியா முன்வந்த நிலையில் உக்ரைனின் தாக்குதலால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கீவ்,
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 905 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்த நிலையில் உக்ரைன் நடத்திய தாக்குதலால் அந்த முயற்சி தகர்ந்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இம்மாத தொடக்கத்தில் உக்ரைன் - ரஷியா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது.
இந்நிலையில், ரஷியாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது. கடந்த 6ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள், ராணுவ டாங்கிகள், ஆயுதங்களுடன் ரஷியாவின் குர்ஷ்க் மாகாணத்திற்குள் நுழைந்தனர். மேலும், ரஷிய வீரர்களையும் பணய கைதிகளாக சிறைபிடித்தனர். அப்பகுதியில் ராணுவ நிலைகளை அமைத்துள்ள உக்ரைன் ராணுவம் சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் இந்த திடீர் தாக்குதலால் தோஹாவில் நடைபெறவிருந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து ரஷியா பின்வாங்கியுள்ளது. இதன் மூலம் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் மேலும் பல மாதங்கள் நீடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.