உக்ரைனில் தொடரும் சோகம்: டிரோன் தாக்குதலில் 3 பேர் பலி
|உக்ரைனில் டிரோன் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கீவ்,
நேட்டோ அமைப்போடு சேர விரும்பும் உக்ரைனுக்கு எதிராக ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி 15 மாதங்களாக நீடித்து வருகிறது. நவீன ராணுவ தளவாடங்கள், வான்வெளி தாக்குதல், கனரக பீரங்கி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ரஷியா உக்ரைனை அச்சுறுத்தி வந்தது. இந்தநிலையில் ராணுவவீரர்கள் பலர் போரில் இறந்த காரணத்தினால் இருநாடுகளிலும் களவீரர்கள் தட்டுப்பாடு நிலவியது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் உக்ரைன் தலைநகர் கீவில் 17 முறை டிரோன் தாக்குதலில் ரஷியா ஈடுபட்டது. ரஷியாவின் வான்வெளி ஆயுதங்களை இடைமறித்து தாக்கக்கூடிய நவீன வான்பாதுகாப்பு தளவாடங்களை உக்ரைன் ராணுவம் கொண்டுள்ளது. இடைமறிப்பின் போது வெடித்து சிதறும் டிரோன்களில் உதிரி பாகங்களில் சிக்கி பொதுமக்கள் இறந்து வருகிறார்கள்.
நேற்று கீவ் நகரில் ரஷிய ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் இறந்தனர். இதனால் கீவ் நகரில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.