ரஷியா-உக்ரைன் சிறை கைதிகள் பரிமாற்றம்; 100 ராணுவ வீரர்கள் சொந்த நாடு திரும்பினர்
|ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் சிறை கைதிகளை பரிமாறி கொண்டதில் மொத்தம் 100 ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளனர்.
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் இடையேயான போரானது 10 மாதங்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இதில், இரு நாட்டை சேர்ந்த வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர். அவர்களில் சிலர் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கவும் செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடந்து வரும் போரின் ஒரு பகுதியாக நடந்து வரும் சிறை கைதிகள் பரிமாற்றத்தின்படி, உக்ரைனால் சிறை பிடிக்கப்பட்ட 50 ரஷிய ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
பேச்சுவார்த்தை நடத்தியதன் தொடர்ச்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது 36-வது கைதிகள் பரிமாற்ற நிகழ்வு ஆகும் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று உக்ரைன் நாட்டு அதிபர் அலுவலக தலைவர் ஆண்டிரி எர்மேக் கூறும்போது, ரஷியாவால் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 50 உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இதன்படி, செர்னோபில் அணு உலை, செர்னிவ், டோனெட்ஸ்க், மரியுபோல், கெர்சன், கீவ் மற்றும் பிற பகுதிகளில் பிடிபட்ட வீரர்கள் உக்ரைனுக்கு திரும்பி வந்துள்ளனர் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
இது கடைசி பரிமாற்றம் இல்லை. எங்களுடைய அனைத்து மக்களையும் திரும்ப பெறும் பணி தொடர்ந்து நடைபெறும். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம் என அவர் கூறியுள்ளார்.
இந்த சூழலில், ரஷியா அறிவித்து இருந்த போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த சனி கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, கார்கிவ் நகரிலுள்ள மெரீபா பகுதியின் மீது 2 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குடிமக்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.