< Back
உலக செய்திகள்
உக்ரைன் டிரோன் தாக்குதலில் 4 நகரங்கள், போர் விமானங்கள் சேதம்; ரஷியா பதிலடி
உலக செய்திகள்

உக்ரைன் டிரோன் தாக்குதலில் 4 நகரங்கள், போர் விமானங்கள் சேதம்; ரஷியா பதிலடி

தினத்தந்தி
|
31 Aug 2023 4:49 AM IST

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் முக்கிய நகரங்கள் மற்றும் போர் விமானங்கள் சேதமடைந்த நிலையில், அதற்கு பதிலடி தரப்பட்டது.

மாஸ்கோ,

ரஷியாவின் மேற்கே லிதுவேனியா, ரோமானியா நாடுகள் எல்லையையொட்டி ஷ்கோவ் மாகாணம் உள்ளது. அதன்மீது, உக்ரைன் ராணுவம் தனது டிரோன்களை அனுப்பி கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் ஓரியோல், பிரையன்ஸ்க், ரியாசான், கலுகா ஆகிய முக்கிய நகரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் ரஷியாவின் 4 போர் விமானங்கள் சேதமடைந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் எதிர்தாக்குதல் நடத்தி ரஷிய ராணுவத்தால் டிரோன்களின் ஊடுருவல் தடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் பதிவாகவில்லை என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரஷிய ராணுவம் கீவ் நகரை நோக்கி ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தியது. இதனை உக்ரைன் ராணுவம் வான்பாதுகாப்பு தளவாடங்களை கொண்டு தகர்த்தது. ஏவுகணை தாக்குதலால் ஷெவ்சென்கிவ்ஸ்கி நகர் சின்னாபின்னமானது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்