ரஷியா: வணிக வளாகத்தில் வெப்ப நீர் குழாய் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
|ரஷியாவில் உள்ள வணிக வளாகத்தில் வெப்ப நீர் குழாய் ஒன்று வெடித்ததில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 70-க்கும் கூடுதலானோர் காயம் அடைந்தனர்.
மாஸ்கோ,
ரஷியாவின் மேற்கு மாஸ்கோ நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில், மக்கள் பலர் நேற்று ஷாப்பிங் செய்து உள்ளனர். இந்த நிலையில் வெப்ப நீர் குழாய் ஒன்று திடீரென வெடித்து உள்ளது.
அதில் இருந்த கொதிக்கும் நீர் அந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் பரவியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் சிக்கி உள்ளனர்.
இதனை நகர மேயர் செர்கே சோபியானின் உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றிய வீடியோவும் வெளியானது. வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக வளாக பணியாளர்கள் ஆகியோருக்கு ஒருபுறம் சம்பவ பகுதியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனினும், மறுபுறம் கட்டிட கதவு பகுதிகளில் இருந்து வெப்பநீர் வெளியேறி வருகிறது. இதனை தொடர்ந்து, ரஷிய புலனாய்வு குழுவினர் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.