< Back
உலக செய்திகள்
ரஷியாவிடம் போதுமான அளவு கிளஸ்டர் குண்டுகள் உள்ளன; தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவோம் - புதின் எச்சரிக்கை
உலக செய்திகள்

'ரஷியாவிடம் போதுமான அளவு கிளஸ்டர் குண்டுகள் உள்ளன; தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவோம்' - புதின் எச்சரிக்கை

தினத்தந்தி
|
18 July 2023 11:02 PM IST

உக்ரைன் ராணுவம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தினால் ரஷியாவும் அதை பயன்படுத்தும் என்று புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. 500 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. இதனிடையே உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்த சூழலில் ரஷியாவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் உக்ரைன் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய சூழலில் 'கிளஸ்டர்' ஆயுதங்களுக்கான தேவை வலுத்திருப்பதாக கூறி அவற்றை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஜெலன்ஸ்கி அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு அபாயகரமான 'கிளஸ்டர்' குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், 'கிளஸ்டர் குண்டுகளின் ஆபத்து காரணமாகவே உக்ரைனுக்கு அவற்றை அளிப்பது தாமதப்படுத்தப்பட்டது. ஆனால் உக்ரைனில் ஆயுத பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. உக்ரைனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள், ரஷியாவால் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைவிட மிகவும் பாதுகாப்பானவை' என்றார்.

'கிளஸ்டர்' குண்டு எனப்படும் கொத்து குண்டுகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ஆயுதமாக பார்க்கப்படுகின்றன. இவை வெடித்துச் சிதறும் போது அதில் இருந்து பல குண்டுகள் காற்றில் சிதறும். மற்ற வகை குண்டுகளை விட கிளஸ்டர் குண்டுகள் மோசமான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும். இதனால் கிளஸ்டர் குண்டுகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது குறித்து ரஷிய அதிபர் புதின் கூறுகையில், "ரஷ்யாவிடம் கிளஸ்டர் குண்டுகள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றன. உக்ரைனில் உள்ள ரஷிய படைகளுக்கு எதிராக இதுபோன்ற வெடிகுண்டுகளை உக்ரைன் ராணுவம் பயன்படுத்தினால், அவற்றைப் பயன்படுத்த ரஷியாவுக்கும் உரிமை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்