< Back
உலக செய்திகள்
உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகள் மீது ரஷியா டிரோன் தாக்குதல்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகள் மீது ரஷியா டிரோன் தாக்குதல்

தினத்தந்தி
|
23 Aug 2023 4:48 PM IST

ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகளின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

கீவ்,

ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டன. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. 'கருங்கடல் தானிய ஒப்பந்தம்' எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படாது என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் அண்மையில் காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க மறுப்பு தெரிவித்த ரஷியா, ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ரஷியாவின் இந்த நடவடிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். ரஷியாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு முதல் முறையாக கடந்த வாரம் இஸ்தான்புல் நகரில் இருந்து கருங்கடல் வழியாக ஒரு சரக்குக் கப்பல் உக்ரைனுக்கு வந்து சேர்ந்தது. அதே சமயம் துறைமுக நகரங்களான ஒடேசா, மிகோலாவ் உள்ளிட்ட பகுதிகளின் மீது ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.

அந்த வகையில் இன்று ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகளின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது 8 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்