< Back
உலக செய்திகள்
நகைக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை:  பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேர் கைது
மாவட்ட செய்திகள்
உலக செய்திகள்

நகைக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை: பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேர் கைது

தினத்தந்தி
|
21 May 2022 10:36 PM IST

பெங்களூருவில், நகைக்கடையின் சுவரை துளையிட்டு தங்கநகைகளை கொள்ளையடித்த வழக்கில் பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

நகைக்கடையில் கொள்ளை

பெங்களூரு ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி உரிமையாளர், நகைக்கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டு இருந்தது. மேலும் கண்ணாடி பெட்டிகளுக்குள் இருந்த தங்கநகைகள் திருடப்பட்டு இருந்தது.

மர்மநபர்கள் சுவரை துளையிட்டு நகைக்கடைக்குள் புகுந்து 5 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

10 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில் நகைக்கடையின் மாடியில் உள்ள ஒரு வீட்டில் வடமாநில பெண் உள்பட சிலர் வசித்து வந்ததும், கொள்ளை நடந்தது முதல் அவர்கள் மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. இதனால் நகைகளை பெண்ணும், அவரது கூட்டாளிகளும் தான் கொள்ளையடித்து சென்றதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பெண் உள்ளிட்ட சிலரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

இந்த நிலையில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளையடித்ததாக ஒரு பெண் உள்பட 10 பேரை ஜே.பி.நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஜார்கண்டை சேர்ந்த உசேன், அடில் மனருல்லா ஹக், சுலைமான் ஷேக், அஜூசூர் ரகுமான், ரமேஷ் பிஸ்த் என்கிற ராஜூ பிஸ்த் என்கிற நேபாளி ராஜ், சதாம், மனருல் ஷேக், சைபுதீன் ஷேக், சலீம் ஷேக், சினூர் பேபி கண்டிதாரா என்பது தெரியவந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஒரு கிலோ 100 கிராம் தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.55 லட்சம் ஆகும். கைதான 10 பேர் மீதும் ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்