< Back
உலக செய்திகள்
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் இங்கிலாந்து.. புதிய மசோதா நிறைவேற்றம்
உலக செய்திகள்

சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் இங்கிலாந்து.. புதிய மசோதா நிறைவேற்றம்

தினத்தந்தி
|
23 April 2024 5:19 PM IST

புலம்பெயர்ந்தோர் தங்கள் தாய்நாடுகளுக்கு அல்லது அவர்கள் தவறாக நடத்தப்படும் ஆபத்தில் இருக்கும் பிற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் இருந்தது.

லண்டன்:

வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தஞ்சம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். எனவே, சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. குறிப்பாக, சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

2022-ல் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது இதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வரும் புலம்பெயர்ந்தோரை தடுக்கவும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் வணிகத்தை முறியடிக்கவும் ருவாண்டா திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து இந்த விவகாரம் சர்ச்சையில் சிக்கியது. சட்டப் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த கொள்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. ஏனென்றால் புலம்பெயர்ந்தோர் தங்கள் தாய்நாடுகளுக்கு அல்லது அவர்கள் தவறாக நடத்தப்படும் ஆபத்தில் இருக்கும் பிற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் இருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது, புலம்பெயர்ந்தோர் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதை தடுக்கும் வகையில் ருவாண்டாவுடன் ரிஷி சுனக் புதிய ஒப்பந்தம் செய்தார்.

இந்நிலையில், புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு விமானங்களில் அனுப்பும் நடவடிக்கையை தொடங்க உள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் கூறி உள்ளார். இந்த புதிய சட்டம், சிறிய படகுகளில் மக்கள் ஆங்கில கால்வாய் வழியாக நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்ற உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மசோதா இந்த வார இறுதியில் சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களை அரசு பிடித்து வைக்கத் தொடங்கும். இது, சட்ட போராட்டம் தீவிரமடைய வழிவகுக்கும்.

மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா., தஞ்சம் கேட்பவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தை இங்கிலாந்து அரசு மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இது சட்டத்தின் ஆட்சியை அச்சுறுத்துவதாகவும், உலக அளவில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கியிருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

1.3 கோடி மக்கள் வசிக்கும் குட்டி நாடான ருவாண்டா, ஆப்பிரிக்காவின் மிகவும் நிலையான நாடுகளில் ஒன்றாக இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், ஜனாதிபதி பால் ககாமே அச்சம் நிறைந்த சூழலில் ஆட்சி செய்வதாகவும், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை முடக்குவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. ருவாண்டா பாதுகாப்பான இடம் அல்ல என்றும் வாதிடுகின்றன.

இதுவரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தல்கள் எதுவும் நடைபெறவில்லை. எனினும், இங்கிலாந்து அரசு ஏற்கனவே ருவாண்டாவிற்கு 240 மில்லியன் பவுண்டுகளை செலுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அனுப்பமுடியும் என நம்புகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், ருவாண்டாவால் சில நூறு பேரை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்