< Back
உலக செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் தேர்தல் பிரசாரத்தை முடித்தார், ரிஷி சுனக்: இன்று ஓட்டுப்பதிவு நிறைவு

Image Courtacy: AFP

உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் பிரசாரத்தை முடித்தார், ரிஷி சுனக்: இன்று ஓட்டுப்பதிவு நிறைவு

தினத்தந்தி
|
2 Sept 2022 5:57 AM IST

பெற்றோருக்கு புகழாரம் சூட்டி, இங்கிலாந்து பிரதமர் தேர்தல் பிரசாரத்தை இந்திய வம்சாவளி தலைவர் ரிஷி சுனக் முடித்தார்.

லண்டன்,

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ்டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிரதமர் பதவிக்கான ஓட்டுப்பதிவு இன்று 5 மணிக்கு முடிகிறது. 1.60 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணையவழியில் வாக்கு அளிக்கிறார்கள். இதையொட்டி ரிஷி சுனக், லண்டன் நகரில் வெம்ப்லியில் உள்ள கச்சேரி அரங்கில் நேற்று முன்தினம் தனது கடைசி பிரசார கூட்டத்தில் பெற்றோர் யாஷ்விர், உஷா மற்றும் மனைவி அக்‌ஷதா மூர்த்தி ஆகியோருடன் தோன்றிப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த இறுதிக்கட்ட பிரசாரம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் என்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடத்தூண்டிய 2 பேர், அதாவது என் அம்மா, அப்பா இங்கே இருக்கிறார்கள். அவர்களின் சேவையும், மக்களுக்கு அவர்கள் செய்த செயல்களும்தான் நான் அரசியலில் குதிக்க உத்வேகம் தந்தன. அம்மா, அப்பா, எப்போதும் நீங்கள் தியாகம் செய்ததற்கும், உங்கள் குழந்தைகளுக்கு உங்களது வாழ்க்கையை விட ஒரு சிறப்பான வாழ்க்கையை அளிக்க பாடுபடுவதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கடின உழைப்பு, நம்பிக்கை, குடும்பத்தின் மீதான உங்கள் அன்பு ஆகியவற்றால் நம் நாட்டில் யாரும் எதையும் சாதிக்க முடியும், அதற்கு எல்லையே கிடையாது என்று எனக்கு கற்பித்திருக்கிறீர்கள். அதற்காக நன்றி. என் மனைவி அற்புதமானவர், அன்பானவர். 18 ஆண்டுகளுக்கு முன்பாக தனது உயரங்களை விட்டுக்கொடுத்து விட்டு, எளியவனான என்னை தேர்ந்தெடுத்ததற்கு மிகுந்த நன்றி.

நான் கடந்த 2 வருடங்களாக ஒரு நல்ல கணவராகவும், தந்தையாகவும் இருக்கிறேன். நான் என் குழந்தைகளை அளவற்று நேசிக்கிறேன். என் மனைவியை அளவற்று நேசிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் வாழ்க்கையில் நான் உடன் இருக்க விரும்பியும், அது முடிந்ததில்லை.

நான் நமது நாட்டைப்பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றை என்னால் வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இந்தப் போட்டியில் உள்ளேன். மக்களின் ஆதரவைப்பெறுவதில் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று அவர் கூறினார்.

சிறப்பு பெறுவாரா?

இன்று முடிகிற பிரதமர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு 5-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார். இவர் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி தம்பதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்