< Back
உலக செய்திகள்
மூன்றாம் சார்லஸ் அரசரால் இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்  ரிஷி சுனக்!
உலக செய்திகள்

மூன்றாம் சார்லஸ் அரசரால் இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார் ரிஷி சுனக்!

தினத்தந்தி
|
25 Oct 2022 4:32 PM IST

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக மூன்றாம் சார்லஸ் அரசரால் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார்.

லண்டன்,

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக மூன்றாம் சார்லஸ் அரசரால் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் வெறும் 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கின. இங்கிலாந்தில் அடுத்த ஆண்டுதான் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமர் பொறுப்பேற்க முடியும் என்ற நிலை இருந்தது.

அந்த வகையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் 134 க்கும் மேற்பட்டோர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அளித்தனர். ஆனால், ரிஷி சுனக்கிற்கு எதிராக போட்டியிட திட்டமிட்டு இருந்த போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மொர்டண்ட் போதிய ஆதரவை பெற முடியாததால் போட்டியில் இருந்து விலகினர்.

இதனால், இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு ஆனார். இதையடுத்து, இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சர்லஸ் இன்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.முதன்முறையாக பிரதமராக ரிஷி சுனக் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் அந்த தம்பதியின் மகள்கள் கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்