< Back
உலக செய்திகள்
41 தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுவினர்: இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

கோப்புப்படம்

உலக செய்திகள்

41 தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுவினர்: இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

தினத்தந்தி
|
30 Nov 2023 12:43 AM IST

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்தியாவின் அற்புதமான சாதனை என்று ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டியுள்ளார்.

கான்பெர்ரா,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் 17 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த மீட்பு குழுக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்தியாவின் அற்புதமான சாதனை என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "இது இந்திய அதிகாரிகளின் அற்புதமான சாதனை. ஆஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் மீட்பு பணியில் பங்கு வகித்தது பெருமைக்குரியது" என்று அந்தோணி அல்பானீஸ் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சுரங்கப்பாதை வடிவமைப்பது, அதில் சிக்கியவர்களை மீட்பதில் நிபுணரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டார். சுரங்கத்தின் முன் பகுதியிலிருந்து தொழிலாளர்களை மீட்பதை விட, மேலிருந்து அவர்களை மீட்கலாமே என யோசனையை அவர் முன்வைத்தார். இதனையடுத்து சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்து துளையிடும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அதாவது, மலையின் பாறை மிகவும் லேசானதாக, உறுதியற்றதாக இருந்தது. எனவே மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் எழுந்தது. இதனையடுத்து 17 நாட்களுக்கு பின்னர் 41 தொழிலாளர்களும் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்