அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை - ஜோ பைடனுக்கு பின்னடைவு!
|பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது.
2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 8-ந் தேதி நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும். ஆனால் டிரம்பின் குடியரசு கட்சி குறைந்தபட்சம் 218 இடங்களை குறுகிய பெரும்பான்மையுடன் வெல்லும் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டிரம்பின் குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி விடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அடுத்த இரண்டு வருட கால கட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிளவுபட்ட அரசாங்கத்தின் நிலைமை அமையும் என்பதால், அது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எஞ்சிய 2 ஆண்டுகள் தலைவலியாக அமையும்.