அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஒபாமா ஆதரவு
|அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
அதன்படி ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வயோதிகம் மற்றும் மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட விவகாரங்களால் அவர் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
இதனையடுத்து தேர்தல் போட்டியில் இருந்து ஜனாதிபதி ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதற்கிடையே அவருக்கு 3-வது முறையாக கொரோனா தொற்றும் உறுதியானது.
பின்னர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். மேலும் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு (59) தனது முழு ஆதரவை அளிப்பதாக அவர் தெரிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் அடுத்த மாதம் சிகாகோவில் நடைபெறும் ஜனநாயக கட்சியின் நிர்வாக கூட்டத்துக்கு பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவரது ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது.
இந்த சந்தேகங்களுக்கு பராக் ஒபாமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு மூலம் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கமலா ஹாரிசுக்கு எப்போதும் தனது ஆதரவு உண்டு. மேலும் அவர் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என தான் நம்புவதாகவும், அவர் வெற்றி பெற தன்னால் இயன்ற உதவியை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசியல் களத்தில் நிலவி வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.