< Back
உலக செய்திகள்
கொரோனா பரவலின்போது பேருதவி; இந்திய அரசுக்கும், மக்களுக்கும் டொமினிக்கா மந்திரி நன்றி
உலக செய்திகள்

கொரோனா பரவலின்போது பேருதவி; இந்திய அரசுக்கும், மக்களுக்கும் டொமினிக்கா மந்திரி நன்றி

தினத்தந்தி
|
24 Sept 2023 9:37 AM IST

கொரோனா பரவலின்போது சரியான தருணத்தில் பேருதவி செய்த இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நன்றி என டொமினிக்காவின் வெளிவிவகார மந்திரி அமெரிக்காவில் கூறியுள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், டொமினிக்காவின் வெளிவிவகார துறை, சர்வதேச வணிகம், வர்த்தகம் மற்றும் ஆற்றல் துறைக்கான மந்திரியான டாக்டர் வின்ஸ் ஹெண்டர்சன் கலந்து கொண்டார்.

அவர் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது தடுப்பூசிகளை அளித்து உதவி செய்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினார். அவர் பேசும்போது, உலகின் மிக முக்கிய தலைநகரில் அமர்வதற்கான வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

நான் கற்ற பாடத்தில் என்னை அதிகம் செயல்பட வைத்தது கொரோனா பெருந்தொற்று என்றே நினைக்கிறேன். நான் பெயர்களை கூற விரும்பவில்லை.

அப்போது கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கான, உடனடியான அவசர தேவையை நாங்கள் எப்படி பெற்றோம் என்ற போராட்ட நிகழ்வை நான் நினைத்து பார்க்கிறேன்.

ஏனெனில், சுற்றுலாவையே நாங்கள் அதிகம் சார்ந்து இருக்கிறோம். சிறிய நாடுகளான நாங்கள் பெருந்தொற்றில் இருந்து எப்படி வெளிவர போகிறோம். எங்களுடைய மக்களை எப்படி பாதுகாக்க போகிறோம். அவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய போகிறோம் என்ற தேவையை நாங்கள் எப்போதும் உணர்ந்திருந்தோம்.

ஆனால், டொமினிக்கா காமன்வெல்த் நாட்டுக்கு தடுப்பூசிகளை உடனடியாக வழங்கி, இந்தியா உதவி செய்தது. அதன்பின் அந்த உதவியை கரீபியனில் உள்ள பிற உறுப்பு நாடுகளுக்கும் எங்களால் கொண்டு செல்ல முடிந்தது.

அதனால், இதுபோன்ற தேவையான தருணத்தில் ஓடி வந்து எங்களுக்கு உதவி செய்த இந்திய அரசுக்கும் மற்றும் அதன் மக்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம். அதிலும், நான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்