அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்களுக்கு முக்கிய பதவி
|ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றது முதலே அவர் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் 80க்கும் மேற்பட்ட இந்தியர்களும், ஒபாமா நிர்வாகத்தில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்ட நிலையில், ஜோ பைடன் 130 இந்தியர்களுக்கு வாய்ப்பளித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இது தவிர அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 4 இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்கும் வேளையில், 35-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாகாண சட்டமன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
அதேபோல் 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.