< Back
உலக செய்திகள்
சீனா முழுவதும் வரலாறு காணாத வறட்சி:  25% சுருங்கிய பெரிய நன்னீர் ஏரி
உலக செய்திகள்

சீனா முழுவதும் வரலாறு காணாத வறட்சி: 25% சுருங்கிய பெரிய நன்னீர் ஏரி

தினத்தந்தி
|
31 Aug 2022 4:49 PM IST

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கடும் வெப்பநிலை பதிவாகி, நீர்நிலைகள் வற்றி கற்கள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன.



பீஜிங்,

உலகம் முழுவதும் பருவகால மாற்றங்களால் வெப்பநிலை உயர்வு, தீவிர வெப்ப அலை பரவல், காட்டுத்தீ போன்ற இடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி உலக வானிலை ஆய்வு மையமும் வெப்ப அலைகள் பாதிப்பு பற்றி எச்சரிக்கை வெளியிட்டது.

இதேபோன்று, ஐரோப்பிய நாடுகளில் பிற பகுதிகளில் இல்லாத வகையில், வெகுசீக்கிரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. இதற்கேற்ப, பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து காட்டுத்தீ பாதிப்புகளும், வெப்ப அலையும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

சீனாவின் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் கொரோனா தொற்றை முன்னிட்டு கடுமையான ஊரடங்குகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகளால் மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், சீனா முழுவதும் கடந்த ஜூன் 13-ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் வரை நீடித்தது.




வடமேற்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தென்கிழக்கு பகுதிகள், கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்பநிலை பதிவானது. வடக்கு சீனாவின் ஹெபய் மாகாணத்தில் மொத்தம் 71 தேசிய வானிலை ஆய்வு மையங்களில் வெப்பநிலை சாதனை பதிவை கடந்தது.

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஹாங்ஷூ நகரில் தீவிர வெப்பம் பற்றிய 54 சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. இது ஒரு நாளில் விடப்பட்ட வெப்பநிலைக்கான எச்சரிக்கை எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும். இதனால், மக்கள் தொகையில் 90 கோடி பேர் பாதிக்கப்பட கூடும். ஒரு வாரத்தில் சீனாவின் பாதி நிலப்பகுதி பாதிப்பிற்குள்ளாகும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நீடித்த வெப்ப அலைகளால் மக்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டது. சீனாவில் சாதனை அளவாக மின்சார பயன்பாடு இருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் நீண்டகால வரலாற்றில் இல்லாத வகையில், 70 நாட்களாக நீடித்த கடும் வெப்பம், குறைவான மழை பொழிவு மற்றும் வெப்ப அலையால் ஆறுகள் சுருங்கின. ஆற்றுப்படுகைகள் வறண்டன.




இதனால், வறட்சி பாதித்த மாகாணங்களில் பாலைவனம் போன்ற சூழல் காணப்படுகிறது. உலகின் 2-வது மிக பெரிய பொருளாதார நாடு என பெருமையுடன் அழைக்கப்படும் சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன்முறையாக நீண்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக நிலவிய அதிக வெப்பநிலை, பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளது.

அந்நாட்டின் மிக பெரிய நன்னீர் ஏரி என அழைக்கப்படும் போயாங் ஏரியானது, அளவில் 25% சுருங்கி விட்டது. தென்மேற்கு சீனாவில் யாங்ட்சே பகுதியில் அமைந்த ஜியாலிங் ஆறும் பாதியளவு வற்றி காணப்படுகிறது. பாறைகளும் தென்படுகின்றன. பல நீர்த்தேக்கங்கள் வெப்ப நிலை பாதிப்புகளால் வற்ற தொடங்கியுள்ளன.

நீர் வற்றிய நிலையில், ஆற்றின் நடுப்பகுதியில் சிறிய ரக கப்பல்கள் தரை தட்டியபடி நிற்கின்றன. இதனால், பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. குடிநீருக்கான வினியோகமும் குறைந்துள்ளது. மக்கள் மின்சார பயன்பாட்டை சார்ந்து வாழும் சூழல் உள்ளது. வெளியே செல்லும்போது, உடன் குடையை கொண்டு செல்கின்றனர். பல ஐரோப்பிய நாடுகள் தீவிர வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதுபோல், சீனாவும் வெப்பநிலை தாக்கத்தின் விளைவால் சிக்கி தவித்து வருகிறது.

மேலும் செய்திகள்