< Back
உலக செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் மீது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி: ரிஷி சுனக்கை பிரதமராக தேர்ந்தெடுக்க  உள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் மீது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி: ரிஷி சுனக்கை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்!

தினத்தந்தி
|
15 Oct 2022 9:48 AM IST

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தீவிரமடைந்து வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தீவிரமடைந்து வருகிறது.

இங்கிலாந்து பிரதமராக உள்ள லிஸ் டிரஸ் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது.புதிய பிரதமராக உள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.

பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். இது பிரதமர் லிஸ் டிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். மேலும், புதிய நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமித்து செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் என தகவல்கள் வெளியாகின.பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கைகள், சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில், 'தி டைம்ஸ்' நிறுவனம் நடத்திய யூகோவ் என்ற 'உங்கள் அரசு' கருத்துக்கணிப்பில், ஆளும்கட்சி ஆதரவாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், தலைமைத் தேர்தலில் கட்சி தவறான வேட்பாளரை தேர்ந்தெடுத்ததாக நம்புகின்றனர்.

இந்நிலையில், கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டான்ட் துணை பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற முடிவை முன்னெடுப்பது குறித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

சட்டரீதியாக 12 மாதங்கள் வரை லிஸ்டிரஸ் பதவியை விட்டு விலக்க முடியாது. எம்.பி.க்கள் சட்ட விதிகளை மாற்றுவதற்கு வாக்களித்து அவற்றை மாற்றினால், பிரதமரை மாற்ற 1 வருடம் வரை காத்திருக்க வேண்டாம்.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் விசுவாசிகள், இத்தகைய சதி நடவடிக்கை, 'ஜனநாயக விரோத செயல்' என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், அரசாங்கம் என்பது 'பாட்டிலை சுழற்றிவிடும் விளையாட்டு அல்ல'. இத்தகைய நடவடிக்கை, பிரதமரை பதவி நீக்கம் செய்வது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி என கூறினர்.

இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கூறுகையில், டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, டிரஸை மாற்றுவது பற்றி யோசிப்பது அரசியல் ரீதியாகவும் பொருளாதார துறையிலும் பேரழிவு தரும் மோசமான யோசனையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்