< Back
உலக செய்திகள்
இரு நாட்டு உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீன வெளியுறவு மந்திரி
உலக செய்திகள்

இரு நாட்டு உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீன வெளியுறவு மந்திரி

தினத்தந்தி
|
25 Dec 2022 6:09 AM GMT

இந்தியா மற்றும் சீனாவின் உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என சீன வெளியுறவு மந்திரி தெரிவித்து உள்ளார்.


பீஜிங்,


சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லை விவகாரம் இரண்டாண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரண்டாண்டுகளுக்கு முன் 2020 ஜூனில் சீன ராணுவம் தனது படைகளை குவித்து ஆக்கிரமிப்பு மற்றும் அராஜக வேலைகளில் ஈடுபட்டது.

இதனை தொடர்ந்து இந்திய தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இரு நாட்டு படைகளுக்கு இடையேயான மோதலில் இந்திய வீரர்கள் 40 பேர் வரை உயிரிழந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

ஆனால், சீனா முதலில் வீரர்கள் உயிரிழக்கவில்லை என மறுத்து விட்டு, உயிரிழந்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவப்படுத்தியது. இந்த புகைப்படங்கள் வெளிவந்து அதனை உறுதிப்படுத்தின. பின்னர் 4 வீரர்கள் உயிரிழப்பு என குறைந்த எண்ணிக்கையை வெளியிட்டது.

இந்த சூழலில், இந்தியா மற்றும் சீனாவின் தளபதிகள் மட்டத்திலான பல சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவில், படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும், இந்திய அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யி, தனது வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தூதரக அளவில் மற்றும் ராணுவ அடிப்படையிலான வழிகளில் தொடர்புகளை மேம்படுத்தி வருகின்றன.

இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் ஸ்திர தன்மை நிலவுவதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் உறவுகள் நிலையான மற்றும் வலிமையான அளவில் வளர்ச்சி காணும் திசையை நோக்கி முன்னேற இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

உலகின் 2-வது மிக பெரும் பொருளாதார நாடான சீனாவில் தற்போது கொரோனா தொற்றுகள் பெரும் பாதிப்புகளை உருவாக்கி உள்ளது. அதனை எதிர்கொள்ள முடியாமல் அரசு திணறி வருகிற சூழல் காணப்படுகிறது.

மேலும் செய்திகள்