எல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு
|எல்லைப் பகுதிகளில் நிலைமையை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
பீஜிங்,
இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டதை தொடர்ந்து இந்த பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன.
இந்த நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு சீன வெளியுறவு மந்திரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தோவலுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், 'சீனாவும், இந்தியாவும், உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட வளரும் நாடுகளாகவும், வளர்ந்து வரும் பொருளாதாரங்களாகவும், இருதரப்பு எல்லைகளைத் தாண்டி உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொண்ட உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. எல்லை விவகாரத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும், எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழல்கள் தொடர்பான பிரச்சினைகளை முறையாகக் கையாளவும், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பாதுகாக்கவும் அஜித் தோவலுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.