ராகுல் காந்தி விவகாரம்; ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்: ஜெர்மனி
|ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில், ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி தெரிவித்து உள்ளது.
பெர்லின்,
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது.
அடுத்தடுத்து நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்வினையாற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு தினம் கடைப்பிடிப்பது, கருப்பு சட்டை அணிந்து பேரணி செல்வது என தொடர்ச்சியாக அக்கட்சியினர் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அடுத்த 30 நாட்களுக்கு மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் நாடு முழுவதும் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் ஜெய் பாரத் சத்யாகிரஹா என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இரு தினங்களுக்கு முன்பு கூறினார்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக வருகிற ஏப்ரல் 3-ந்தேதிக்கு அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, இந்தியாவின் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக முதன்முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய விசயங்களை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். அவரது, நாடாளுமன்ற எம்.பி. பதவி முடக்கம் பற்றியும் கவனம் கொண்டுள்ளோம்.
நாங்கள் அறிந்த வரை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கூடிய ஒரு நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார் என தெரிவித்து உள்ளார்.
அதன்பின்னர், இத்தீர்ப்பு நிலையானதொன்றா? என்றும் அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா? என்பது பற்றியும் தெளிவாக தெரிய வரும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விசயத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் இருக்க வேண்டும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் பற்றி நாங்கள் கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா இந்த வாரத்தில் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து, ஜெர்மனியும் இந்த விவகாரத்தில் பதிலளித்து உள்ளது.