அமெரிக்காவில் 21-ம் தேதி குவாட் அமைப்பு மாநாடு: பிரதமர் மோடி, ஜோ பைடன் பங்கேற்பு
|அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி இந்தியா வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார்.
வாஷிங்டன்,
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. குவாட் அமைப்பின் 2024-ம் ஆண்டு மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாநாடு இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அவர் மாநாட்டை தலைமை தாங்கி நடத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து வருகிற 21-ந்தேதி ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேர் வில்மிங்டனில் குவாட் உச்சிமாநாடு நடக்கிறது. இதில் ஜோ பைடன். மோடி, ஆஸ்திரேலியா பிரதமர். ஜப்பானிய பிரதமர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஐ. நா. பொதுச்சபையின் அமர்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். இதையடுத்து அவர்கள் அமெரிக்காவில் நடக்கும் குவாட் மாநாட்டில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆண்டுக்கு பதில் அடுத்த ஆண்டு இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தில் 22-ந்தேதி இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசுகிறார். 22, 23-ந்தேதிகளில் ஐ.நா.வின் எதிர்கால மாநாட்டில் உரையாற்றுகிறார்.