"ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பது அணுசக்தி பிரச்சினையை தீர்க்க உதவாது" - சீனா கருத்து
|ஈரானுக்கும் சர்வதேச அணுசக்தி முகமை வாரியத்துக்கும் இடையிலான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
வியன்னா,
ஈரானில் 3 அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனிய தடையங்கள் குறித்த விசாரணைக்கு ஈரான் அரசு ஒத்துழைக்க வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சார்பில் சர்வதேச அணுசக்தி முகமை வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச அணுசக்தி முகமை வாரிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு எதிராக சீனா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தின் மூலம் ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதை சீனா எதிர்ப்பதாக ஐ.நா. சபைக்கான சீனாவின் நிரந்தர தூதரகத்தின் துணைத் தலைவர் வாங் சான் கூறினார்.
மேலும் ஈரானுக்கும் சர்வதேச அணுசக்தி முகமை வாரியத்துக்கும் இடையிலான இந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும் என அவர் கூறினார். ஈரானுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளை களைவதற்கும், தொடர்புடைய தரப்புகள் சர்வதேச அணுசக்தி முகமை வாரிய கூட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வாங் சான் தெரிவித்தார்.