உக்ரைன் விவகாரத்தில் அமைதியாக இருந்த நாடுகளும் இப்போது புதினை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளன: அமெரிக்கா
|சர்வதேச சமூகத்திலிருந்து புதின் தன்னை மேலும் தனிமைப்படுத்திக் கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
வாஷிங்டன்,
உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
சமர்கண்டில் நடந்த சந்திப்பின் போது மோடி புதினிடம் கூறுகையில், "இன்றைய காலமானது, போர் நடத்துவதற்கான காலம் அல்ல. இது குறித்து நான் உங்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்" என்று புதினிடம் கூறினார்.
அதற்கு, "உங்கள் கவலைகள் பற்றி எனக்குத் தெரியும். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று மோடியிடம் புதின் கூறினார்.
இந்த இரு தலைவர்கள் உரையாடல் குறித்து அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. வெள்ளை மாளிகை தரப்பில் வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறிய பதிலில், "உக்ரைனில் புதின் அனுதாபம் காட்டவில்லை.அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி அவருக்கு தெரியவில்லை.உஸ்பெகிஸ்தானில் இரு தலைவர்களும் பேசியது இந்த உண்மையைக் குறிக்கிறது.
புதினை எதிர்த்து குரல் கொடுக்காத மற்றும் கடுமையாக இல்லாத நாடுகள் கூட உக்ரைனில் அவர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன. இதன்மூலம், சர்வதேச சமூகத்திலிருந்து புடின் தன்னை மேலும் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.இது முற்றிலும் மோசமானது மற்றும் கொடூரமானது" என்று கூறினார்.