ஈரான், துருக்கி அதிபர்களுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை
|ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தெஹ்ரான்,
உக்ரைன் மீது ரஷியா 147-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளை சமாளிக்க ஆசியா, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்த ரஷியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தற்போது ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
ஈரான் சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.