ரஷிய அதிபர் தேர்தலில் புதின் வெற்றி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
|ரஷியாவில் 1999 டிசம்பர் மாதத்தில் இருந்து அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பதவியில் நீடிக்கிறார் புதின்.
ரஷியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் களமிறங்கினார். வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. கிரெம்ளின் ஆதரவு வேட்பாளர்கள் 3 பேர் மட்டுமே புதினுக்கு எதிராக போட்டியிட அனுமதி கிடைத்தது. அவர்களும், உக்ரைன் மீது புதின் அரசாங்கம் நடத்தி வரும் போருக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் புதின் வெற்றி பெறுவது நிச்சயம் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 87.29 சதவீத வாக்குகள் பெற்று புதின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. மே மாதம் பதவியேற்பு விழா நடைபெறும். எந்தவித எதிர்ப்போ சஸ்பென்சோ இல்லாமல் இந்த தேர்தல் நிறைவுபெற்றிருக்கிறது.
1999 டிசம்பர் மாதத்தில் இருந்து அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பதவி வகித்து ரஷியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் புதின்.