பஞ்சாப்: அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி மர்ம மரணம்; விஷம் வைத்து கொலையா?
|பஞ்சாப்பில் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி இங்கிலாந்தில் திடீரென மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.
லண்டன்,
பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், இவரது ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அவர்களை தடுக்க முயன்ற காவல் துறையினர் சிலர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்த அம்ரித்பால் சிங், போலீசாரிடம் சிக்காமல் தப்பினார். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர், பஞ்சாப்பின் மொகா நகரில் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி அவர் போலீசில் சரண் அடைந்து விட்டார். அவரது எட்டு கூட்டாளிகளும், அவருடன் அசாம் திப்ரூகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அம்ரித்பால் சிங் போலீசில் சிக்காமல் 37 நாட்கள் தப்பிப்பதற்கு உதவியாக இருந்தவர் அவருடைய கூட்டாளி அவதார் சிங் கண்டா. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்பட கூடிய காலிஸ்தான் விடுதலை படையின் தலைவராகவும், காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பின் முக்கிய நபராகவும் அறியப்படுபவர் அவர்.
இந்த சூழலில், இங்கிலாந்தில் அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணரான அவர், கடந்த மார்ச் 19-ந்தேதி லண்டனில் தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின்போது, இந்திய கொடியை அவமதிப்பு செய்ததற்கு பின்னணியாக செயல்பட்ட முக்கிய நபராவார்.
இந்த சம்பவத்தில் கண்டா மற்றும் பிற 3 பிரிவினைவாதிகளை முக்கிய குற்றவாளிகளாக தேசிய புலனாய்வு முகமை அடையாளம் கண்டது. 2007-ம் ஆண்டு கல்வி விசாவில் இங்கிலாந்து சென்றவர் பின்னர் அந்நாட்டிலேயே தங்கி விட்டார்.