புதுச்சேரி-இலங்கை இடையே விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து - இலங்கை மந்திரி தகவல்
|இந்தியா-இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
புதுச்சேரி-இலங்கை இடையே எந்த நேரத்திலும் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. இதனால், எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு எளிதாக கொண்டு செல்லலாம்.
இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எரிபொருள், மருந்துகள், உணவு பொருட்கள், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரியும், தமிழர் கட்சி ஒன்றின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"இந்தியா-இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டது- இதனால், எந்த நேரத்திலும் போக்குவரத்து தொடங்கும்.
இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்கும், இந்தியாவின் புதுச்சேரிக்கும் இடையே இந்த சரக்கு கப்பல் இயக்கப்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இடையே இது இலங்கைக்கு நிவாரணமாக அமையும்.
இந்தியாவில் இருந்து எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மலிவு விலையிலும், எளிதாகவும் இலங்கைக்கு கிடைக்கும். சரக்கு கப்பல் போக்குவரத்துக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்க போகிறேன்.
இதுபோல், யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்துக்கும், தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடையே ஜூலை 1-ந்தேதி விமான போக்குவரத்து தொடங்குகிறது."
இவ்வாறு அவர் கூறினார்.