இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்; நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த வீடியோ வைரல்!
|அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சொகுசு கார்களில் வலம் வந்தனர்.
கொழும்பு,
பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். இன்று இலங்கை அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.
இந்த நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர்.
அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. முன்கூட்டியே உளவுத்துறை மூலம் இந்த தகவல்களை அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாளிகையில் இருந்து தப்பி விட்டார்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சொகுசு கார்களில் வலம் வந்தனர். அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளில் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
அதிபர் மாளிகைக்குள் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தேசியக் கொடியை போர்த்தி, அங்குள்ள அறைகள் மற்றும் தாழ்வாரங்களுக்குள் நிரம்பியிருந்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அவர்களில் சிலர் நீச்சல் குளத்தில் குளிப்பதும், மற்றவர்கள் படுக்கை மற்றும் சோபாக்களில் அமர்ந்திருப்பதும் வெளியாகி உள்ளது.