இலங்கை பிரதமர் இல்லத்தில் குத்துச்சண்டை விளையாடும் போராட்டக்காரர்கள்...!
|இலங்கை பிரதமர் இல்லத்தில் போராட்டக்காரர்கள் குத்துச்சண்டை விளையாடினர்.
கொழும்பு,
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர்.
இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் விடிய விடிய அங்கேயே தங்கி இருந்தனர். இன்று காலை அங்குள்ள குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். பெரும்பாலானவர்கள் அதிபர் மாளிகை அரங்குகளுக்குள் தரையில் சொகுசாக படுத்துக் கொண்டு டி.வி. பார்த்தபடி இருந்தனர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்களில் ஒரு சில இளைஞர்கள் பிரதமர் இல்லத்திற்கு உள்ளே சென்று மெத்தையில் ஏறி குதித்தும், ஒருவரை ஒருவர் தூக்கிபோட்டு குத்துச்சண்டை விளையாட்டு விளையாடி மகிழ்ந்தனர்.
அவர்களில் ஒரு சிலர் அதனை தங்களுடைய மொபைல் போனில் போட்டோ மற்றும் விடியோ எடுத்தனர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து வைரலாகி வருகிறது.