< Back
உலக செய்திகள்
அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு
உலக செய்திகள்

அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு

தினத்தந்தி
|
6 March 2023 12:44 PM IST

அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.



வாஷிங்டன்,


இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அரியணை ஏறினார்.

இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, நடப்பு ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.

இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ந்தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி, மே 6-ந்தேதி சனிக்கிழமை முடி சூட்டு விழாவை தொடர்ந்து, மே 8-ந்தேதி திங்கட்கிழமை வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவியான மேகன் மார்கலே ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

எனினும், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரி தம்பதி இங்கிலாந்து செல்வார்களா? என்பது பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுபற்றி அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட பீப்பிள் என்ற ஊடக நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இளவரசரின் செய்தி தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், முடிசூட்டும் விழா பற்றி இளவரசர் ஹாரிக்கு சமீபத்தில் இ-மெயில் ஒன்று வந்தது என நான் உறுதிப்படுத்த முடியும்.

இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரி தம்பதி கலந்து கொள்வார்களா? என்பது பற்றிய உடனடி முடிவை இந்த தருணத்தில் எங்களால் வெளியிட முடியாது என தெரிவித்து உள்ளார். எனினும், இதுபற்றி பக்கிங்காம் அரண்மனை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

இளவரசர் ஹாரி தம்பதிக்கும், அரச குடும்பத்திற்கும் இடையேயான உறவில் தொய்வு ஏற்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மேகனின் சொந்த ஊருக்கு இளவரசர் ஹாரி தம்பதி புலம்பெயர்ந்தனர்.

மேலும் செய்திகள்