அபுதாபியில் யு.பி.ஐ. பயன்பாட்டை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி
|அபுதாபியில் யு.பி.ஐ. பயன்பாட்டை பிரதமர் மோடியும், அமீரக அதிபர் அல் நஹ்யானும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
அபுதாபி,
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் மூலம் அங்கு சென்ற பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இதனைதொடர்ந்து பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அபுதாபியில் 'ஆஹ்லான் மோடி' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 'ஆஹ்லான் மோடி' என்றால் அரபு மொழியில், 'மோடியை வரவேற்கிறோம்' என்று பொருள் ஆகும். இந்த நிகழ்ச்சியின்போது அபுதாபியில் யு.பி.ஐ. ரூ-பே (RuPay) கார்டு பயன்பாட்டை பிரதமர் மோடியும், அமீரக அதிபர் அல் நஹ்யானும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவின் யு.பி.ஐ. (UPI) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏ.ஏ.என்.ஐ. (AANI) ஆகிய சேவைகளை இணைப்பது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் இரு நாடுகளின் உள்நாட்டு டெபிட்/கிரெடிட் கார்டுகளை இணைக்கும் வகையில் இந்தியாவின் ரூ-பே (RuPay) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜேவான் (JAYWAN) இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளிடையே நிதித்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ரூ-பே பயன்பாட்டை அதிகரிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.