பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வழங்கினார், அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
|பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார்.
பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டில் இன்று ( ஜூலை 14ஆம் தேதி) பாஸ்டில் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ஒரு ராணுவக் குழு பங்கேற்கும். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவர் இங்கு இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றினார். தொடர்ந்து பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். இராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
கடந்த காலத்தில், கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர் உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்களால் பெறப்பட்டது. இவர்களில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், புட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் உள்ளிட்டோர் அடங்குவர்.