துருக்கி நாட்டில் அதிபர் தேர்தல்; வாக்கு பதிவில் 6.41 கோடி பேர் பங்கேற்பு
|துருக்கி நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவில் 6.41 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கின்றனர்.
அங்காரா,
துருக்கி நாட்டில் அதிபராக ரீசெப் தயீப் எர்டோகன் பதவி வகித்து வருகிறார். நீண்ட காலம் அந்த பதவியில் பிரதமராக பதவி வகித்து வரும் சூழலில், 600 இடங்களை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. எர்டோகனை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளராக கெமல் கிலிக்டாரொகுலு போட்டியிடுகிறார். நாட்டில் மக்கள் வாக்களிப்பதற்காக, மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 885 வாக்கு பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இன்று மாலை 5 மணிவரை மக்கள் வாக்களிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் 6.41 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். இவர்களில் 19.2 லட்சம் பேர் வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் முன்பே வாக்களித்து விட்டனர்.
வெளிநாடுகளில் நடந்த இந்த தேர்தல் கடந்த புதன்கிழமை (மே 24-ந்தேதி) வரை நடந்தது. இன்று நடைபெறும் தேர்தல், தங்களது வாழ்வின் மிக முக்கிய தேர்ந்தெடுத்தலாக இருக்கும். நாடு மற்றும் குழந்தைகளின் வருங்காலம் பற்றி கவனத்தில் கொண்டு எடுக்க கூடிய ஒரு முடிவாக இருக்கும் என எர்டோகன் மக்களிடம் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி வேட்பாளரான கிலிக்டாரொகுலு கூறும்போது, முதன்முறையாக, இரு வேட்பாளர்கள் மற்றும் இரண்டு உலக பார்வைகளை கொண்ட நபர்களில் ஒருவரை துருக்கி நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர் என கூறியுள்ளார்.