< Back
உலக செய்திகள்
அமீரக அதிபருடன் ஈராக் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை
உலக செய்திகள்

அமீரக அதிபருடன் ஈராக் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
10 Feb 2023 1:46 AM IST

அமீரக அதிபருடன் ஈராக் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசு முறை பயணமாக அபுதாபி வந்த ஈராக் நாட்டின் பிரதமர் முகம்மது சியா அல் சூடானி அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஈராக் பிரதமர் வருகை

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருகிறது. இந்த உறவை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக அமீரக தலைநகர் அபுதாபிக்கு அரசு முறை பயணமாக ஈராக் நாட்டின் பிரதமர் முகம்மது சியா அல் சூடானி வருகை புரிந்தார். அவரை அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி அலுவலக மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்றார்.

பின்னர் அபுதாபி கசர் அல் வத்தன் அரண்மனைக்கு ஈராக் நாட்டின் பிரதமர் முகம்மது சியா அல் சூடானி மற்றும் குழுவினர் வந்தனர். அவர்களை அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்றார். அப்போது ஈராக் நாட்டு பிரதமருக்கு முப்படையினரின் ராணுவ அணி வகுப்பு வழங்கப்பட்டதுடன், 21 குண்டுகள் முழங்க மரியாதையும் அளிக்கப்பட்டது.

அதிபருடன் சந்திப்பு

தொடர்ந்து அமீரக அதிபர் மற்றும் ஈராக் நாட்டின் பிரதமர் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

குறிப்பாக ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அமீரக அதிபர் முன்னிலையில் ஈராக் நாட்டின் பிரதமர் கையெழுத்திட்டார்.

மந்திரிகள்

நிகழ்ச்சியில் அபுதாபி நிர்வாக கவுன்சிலின் துணைத் தலைவர் ஷேக் ஹஸ்ஸா பின் ஜாயித் அல் நஹ்யான், அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான மேதகு ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மந்திரிகள் அமீரகத்தின் சார்பில் பங்கேற்றனர்.

மேலும் ஈராக் நாட்டின் துணை பிரதமர் மற்றும் திட்டத்துறை மந்திரி டாக்டர் முகம்மது அலி தமிம், மின்சாரத்துறை மந்திரி ஜியாத் அலி பாதெல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

துணை அதிபர்

அமீரக அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து துபாய் ஜாபில் அரண்மனையில் அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை ஈராக் நாட்டின் பிரதமர் முகம்மது சியா அல் சூடானி சந்தித்து பேசினார்.அப்போது இரு தரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த சந்திப்பின் போது துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்