< Back
உலக செய்திகள்
உக்ரைன் அதிபருடன் சவுதி வெளியுறவு மந்திரி சந்திப்பு
உலக செய்திகள்

உக்ரைன் அதிபருடன் சவுதி வெளியுறவு மந்திரி சந்திப்பு

தினத்தந்தி
|
27 Feb 2023 11:40 PM IST

சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து 40 கோடி அமெரிக்க டாலர் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

உக்ரைன்- ரஷியா போர்

நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

,இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஓராண்டை கடந்து அதே நிலை நீடித்து வருகிறது. போரில் ஏற்கனவே உக்ரைனுக்கு ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியிலும், ஆயுதங்களை வழங்கியும் ஆதரவு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

இதில் வளைகுடா நாடுகளில் ஏற்கனவே சவுதி அரேபியா தனது ஆதரவை தெரிவித்தது. அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்தார். மேலும் உக்ரைன்- ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் அனைத்து விதமான முயற்சிகளும் தொடரப்படும் என அறிவித்தார்.

40 கோடி அமெரிக்க டாலர்

இதற்காக தற்போது சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத் உக்ரைன் சென்றுள்ளார். அங்கு கீவ் நகரில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு அதிபர் முன்னிலையில் உக்ரைன் நாட்டுக்கு மனிதாபிமான மற்றும் பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

ஒப்பந்தத்தில் சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத் மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரி ஆண்ட்ரிய் எர்மேக் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதில் சவுதி அரேபியா சார்பில் உக்ரைனுக்கு 40 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்