சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்
|சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி கூறினார்.
ராணுவ ஆட்சி
ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு அந்த நாட்டின் அரசியல்வாதிகளும், ராணுவத்தின் ஒரு பிரிவான ஆர்.எஸ்.எப். என்று அழைக்கப்படும் துணை ராணுவ படையினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் தலைநகரான கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை ராணுவ படையினர் கடந்த 15-ந்தேதி அறிவித்தனர். இதனையடுத்து இந்த மோதல் தீவிரம் அடைந்து உள்நாட்டு போராக மாறியது.
பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்
இதில் இரு தரப்பினரும் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு மாறிமாறி தாக்கினர். இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 413 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஐ.நா. வலியுறுத்தல்
இதனையடுத்து இந்த போர் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. எனவே ேபாைர நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் பல நாடுகள் சூடான் ராணுவ தளபதிகளை வலியுறுத்தின. அதன்பேரில் 3 நாட்கள் இந்த போரை நிறுத்தி வைக்க இரு தரப்பினரும் சம்மதித்தனர். இதனை பயன்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
இந்த போர் நிறுத்தத்தை பயன்படுத்தி அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களை தாயகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது. ஆனால் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் போரால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனால் அவர்களை வெளியேற்றுவதில் சிக்கல் நிலவுவதால் தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக சூடான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நடவடிக்கை
இதற்கிடையே தங்களது தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதற்காக ராணுவ துருப்புகளை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் அங்கு வசிக்கும் 16 ஆயிரம் அமெரிக்கர்களை ஒருங்கிணைத்து வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் செங்கடலில் உள்ள நாட்டின் முக்கிய துறைமுகமான போர்ட் சூடானில் இருந்து சவுதி அரேபியா வழியாக சில தூதர்களை வெளியேற்றி உள்ளதாகவும், ஜோர்டானின் தூதரக அதிகாரிகள் அதேபோல் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் எனவும் அந்த நாட்டின் ராணுவ தளபதி அப்தெல் பட்டா புர்ஹான் கூறினார்.