< Back
உலக செய்திகள்
காசா மீது தரை வழி படையெடுப்புக்கு தயார்:  இஸ்ரேல் பாதுகாப்பு படை
உலக செய்திகள்

காசா மீது தரை வழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பாதுகாப்பு படை

தினத்தந்தி
|
25 Oct 2023 9:09 AM IST

காசா மீது தரை வழி படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 19-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹாலேவி கூறும்போது, நான் தெளிவாக கூற விரும்புகிறேன். படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

ஒவ்வொரு நிமிடம் கடந்து போனாலும், எதிரிகளை நாங்கள் இன்னும் கூடுதலாகவே தாக்குவோம். பயங்கரவாதிகளை, அவர்களுடைய தளபதிகளை நாங்கள் கொல்வோம். அவர்களின் உட்கட்டமைப்புகளை தாக்கி அழிப்போம். அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான உளவு தகவல்களை இன்னும் அதிகம் சேகரிப்போம் என்று கூறியுள்ளார்.

அவர்களை பதற்றத்திலேயே நாங்கள் வைத்திருப்போம் என கூறிய ஹாலேவி, இஸ்ரேலின் படையெடுப்புக்காக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நீண்டகாலம் காத்திருக்கும்போது, அது அவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, களத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, எங்களுக்கு ஒரேயொரு பணி உள்ளது. அது அவர்களை அழிப்பது. அந்த பணியை முடிக்கும் வரை நாங்கள் நிறுத்தமாட்டோம் என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்